சாஸ்தா வழிபாட்டின் தொன்மை


உலகம் முழுவதும் ஐயப்பன் வழிபாடு மிகவும் பிரபலமாகி வருகிறது. எனினும் முன்னுக்கு பின் முரண்பாடான பல புராணக் கதைகளும், செவிவழி கதைகளையும் ஒன்றோடொன்று இணைத்து அவரவர் தம் கற்பனா வசதிக்கு ஏற்ப கூற ஆரம்பித்ததை தொடர்ந்து சாஸ்தா என்றழைக்கப்படும் ஸ்ரீ ஐயப்பன் அவதாரம், வழிபாடு பற்றிய சில சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

சாஸ்தா என்றதும் நம்மில் பலருக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் அகில உலகமெங்கும் கணக்கிலடங்கா சாஸ்தா கோவில்கள் நெடுங்காலமாகவே உண்டு. சாஸ்தா என்ற பெயர் கொண்ட மலை California (கபிலாரண்ணியம்), America வில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் என்பது சாஸ்தாவின் அவதாரங்களில் ஒன்று.


யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா.


கிருதயுகத்தில், கந்த புராணத்தில் முருகபெருமான் அவதாரதிருக்கு முன்பு சாஸ்தா இந்திராணியை காத்தருளியதை பற்றி விவரித்து உள்ளது (இடம் : தென்பாதி கிராமம், சீர்காழி). அதே போல் சிவபுராணத்திலும் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்தினிகளுக்கும் பாடம் புகட்ட சிவன் பிக்ஷாடனாகவும், திருமால் மோகினியாகவும் உருமாறி அவர்களை நல்வழி படுத்தியபின் சிவ-விஷ்ணு சேர்க்கையில் அயோனிஜனாக சாஸ்தா அவதரித்தார் என்று வழுவூர் மகாத்மியம் கூறுகின்றது (இடம் : கழனிவாசல், வழுவூர்)


இராமாவதாரம் திரேதாயுகத்தில் நடைபெற்றது. புத்திர காமேஷ்டி யாகம் நடந்த பொது யாக குண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு "மகத்பூதம்" என்று வால்மீகி வர்ணிப்பது சந்தான ப்ராப்தி அருளும் சாஸ்தாவையே ஆகும். இராமர், சீதாதேவியை மணக்க, "சிவதனுசு" வில் சாஸ்தாவின் ஆவேச சக்தியை கொண்டு முறித்ததாக கரந்தையார் பாளையம் வரலாறு கூறுகிறது. துவாபர யுகத்தில் (மகாபாரத காலம்) சாஸ்தா தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது (இடம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோவில்) கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலனாக மகிஷியை சம்ஹாரம் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்


சிவனை அய்யன் என்றும் விஷ்ணுவை அப்பன் என்றும் அழைத்தவர்கள் ஹரி-ஹர புத்திரனை அய்யப்பன் என்றும் அழைக்கலாயினர். அய்யன் என்பது சாஸ்தாவை குறிக்கும்.


தமிழில் சாத்தன் என்ற பெயர் சாஸ்தாவையே குறிக்கும். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கங்களில் இருந்த புலவர்களின் பெயர்களில் சாத்தன் என்ற பெயருடன் பலரை காணலாம். உதாரணமாக சீத்தலை சாத்தனார், மோசி சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் etc சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற தமிழ் நூல்களிலும் சாத்தனாரை பற்றி குறிப்புகள் காணலாம். தற்போதய ஊர்களின் பெயர்களில் சாத்தனூர் என்பதும் சாஸ்தாவே குறிக்கும்


மேற்கூறிய ஒரு சில எடுத்துக்காட்டுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகளில் சில:


சாஸ்தா அவதாரமும் வழிபாடும் மிகவும் தொன்மையானது, சங்க காலத்துக்கும் முற்பட்டது, புராண இதிகாச கலங்களுடன் சம்பந்தப்பட்டது.

தமிழ் கலாசாரத்துக்கும், தமிழர் வழிபாட்டுக்கும் உரிய தெய்வமாகவே சாஸ்தா விளங்கி வருகிறார்.

சாஸ்தாவின் அவதாரங்கள் பற்பல. எனினும்


"எட்டு அவதாரங்கள் உண்டு,

எட்டு ஸ்வரூபங்கள் உண்டு"

என்ற புராதீனமான வரவு பாடலின் அடிப்படையில் கலியுகத்திற்கு உகந்தவாறு ٨ அவதாரங்களின் பஞ்சலோக சிலாரூபங்களை செய்து காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் அருளாணையின்படி எங்கள் குருநாதர் ஸ்ரீ விஸ்வநாத சர்மா உருவாக்கி தன் வீட்டில் வழிபட்டு வந்தார். அந்த விக்ரஹங்களுக்கு கோவில் கட்ட முயற்சிகளும் எடுத்தார். அவர் முயற்சிகளை திருவினையாக்க அந்த 8 வித அபூர்வ நிலைகளை கொண்ட சாஸ்தாவுக்கு திருக்கோவில் ஒன்றை அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறோம்.