சம்மோஹன சாஸ்தா
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடியைச் சுமந்து கொண்டு சபரிமலைக்குக் கிளம்பும் முன்னர் ஓர் தேங்காயைத் தனது வீட்டின் வாயிற்படி அருகில் உடைக்கிறான். தான் இல்லாத நேரத்தில் தனது இல்லத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாத்து வர பகவானின் பூத கணங்களில் ஒன்றை நிறுத்த வேண்டி இதை செய்கிறான். உடனே தேங்காய் உடைத்த இடத்தில் ஓர் பூதகணம் தங்கிக் காவல் காக்கிறது.
சபரிமலை யாத்திரை முடிவுற்று வீடு நெருங்கியவுடன். யாத்திரைக் காலத்தில் தன் இல்லத்தைக் காத்து வந்த பூதகணத்தை தியானித்து வணங்கி ஐயனே! நான் யாத்திரை முடிந்து திரும்பும் வரை என் உடமைகளையும், குடும்பத்தினரையும் காத்தருளிய உங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்வீராக என்று முன்பு தேங்காய் உடைத்த இடத்திலேயே மீண்டும் தேங்காய் உடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைகிறான்.புராண காலம், வரலாற்றுக்காலம், நமது காலம் என்று காலங்கள் மாறலாம் ஆனால் இறைவன் கருணை என்றும் மாறாது. குறையாது என்பதை பின் வரும் கந்தபுராணத்தின் நிகழ்ச்சி நமக்கு தெரிவிக்கின்றது.
சூரபத்மன் கொடுமைகள் தாங்க முடியாமல் சிவனிடம் முறையிட இந்திரன் செல்ல வேண்டிய கட்டாயம் நேர்ந்தது, பூலோகத்தில் சீர்காழி அருகே மறைந்து வாழ்ந்து வந்த இந்திரன் கைலாயம் செல்ல முற்பட்டான். தான் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் சாஸ்தாவின் பாதுகாவலில் இந்திராணியை விட்டு சென்றான். இந்திரன் கைலாயம் சென்ற நேரத்தில் சூரபத்மனின் தமக்கையான அஜமுகி இந்திராணியை சித்ரவதை செய்ய, உடனே சாஸ்தாவின் பரிவாரமான வீரமாகாளர் அஜமுகியின் கையை வெட்டி எறிந்தார்.சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகத்தோன் பிறக்க போகிறார்.
ஆறுமுகத்தோனே சூரபத்மனை வதைப்பார் என்ற செய்தியை அறிந்தவுடன் இந்திரன் பூலோகம் திரும்பினார்.தான் பூலோகத்தில் இல்லாத நேரத்தில் நடந்ததை கேட்டு சாஸ்தாவை த்யானிக்க சாஸ்தா வெள்ளையானை மேல் பூரணை புட்களையுடன் காட்சி தந்ததாக கந்தபுராணம் நமக்கு கூறுகிறது.
மேலும் புராணங்களில் பலவற்றுள்ளும் தொன்மையானது ஸ்காந்தம் என்பார்கள். அதில் திருமுருகவேள் அவதார காலத்திற்கும் முன்பே சாத்தனார் அவதாரம் செய்து பூரணை புட்களை எனும் இருதேவியருடன் கயிலையில் வாஸம் செய்த ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி என்று அறியலாம். இறைவனை முருகனின் தம்பியே முருகனுக்கிளையோனே என்றும் அழைப்பதை விடுத்து முருகனின் சோதரனே சரணமய்யப்பா என்று அழைப்பதே சாலப்பொருத்தமாகும்.