ஞான சாஸ்தா
சாஸ்தா என்ற பெயருக்கு வழிநடத்துபவர் (அல்லது குரு) என்று அர்த்தம். அதனால் தான் ஐயப்பன் வழிப்பாட்டில் குரு முகமாகவே எந்த ஒரு செயலையும் செய்ய அறிவுரைப்பார்கள்.
ஞானமே வடிவாக தான் இருந்தாலும்,நியதிப்படி தன் குருவான சிவபெருமானிடம் உபதேசம் எடுத்துள்ளார். ஆசார்ய ஸ்தானத்தில் சிவபெருமானிடம் புஷ்பகிரி என்ற மலையருகில் உள்ள அழகிய மாளிகையில் சாஸ்தா, விநாயகர், கந்தர்,பார்வதி தேவி, பைரவர், வீரபத்ரர், மற்ற பூதகணங்கள் ஆகியோர் உபதேசம் எடுத்ததாக ஸ்காந்த மகாபுராணம் கூறுகிறது (சங்கர சம்ஹிதை, சிவ ரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம் - 86).
“ஓம் தக்ஷிணமூர்த்தி ரூபகாய நம; ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம:” etc போன்ற நாமங்கள் நமக்குணர்த்தும் விஷயங்கள்:சாஸ்தா மாணிக்க வீணையை ஏந்திய கையுடன், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள குருபகவான் போல் குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.
கும்பகோணம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ப்ரகாரத்தின் மேல்பத்தியில் கல்யாண சாஸ்தா உற்சவ மூர்த்தியாக வீற்றிரிக்கிறார். ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டம், ஹேமாவதி என்ற ஊரில் சாஸ்தா மாதிரி குந்தியிட்டு உட்கார்ந்த நிலையில் தக்ஷிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.
“ஓம் சர்வ ஸ்த்ரார்த்ரார்த்த தத்வஞாய நம, ஓம் வித்யா விருக்ஷாய நம, ஓம் மூல வித்யா ஸ்வரூபகாய நம”etc என்றெல்லாம் சாஸ்த்ரு சஹஸ்ரநாமத்தில் படித்திருக்கிறோம் அல்லவா?
ஞானம் என்பது பகவானுடைய நிர்குண, நிராகார, நிரதிசய தத்துவங்களின் பெருமை, ரகசியம், ஆகியவற்றை அறிவது. விக்ஞானம் என்பது குணங்களோடு கூடிய (ஸகுணமான) தெய்வத் திருமேனியின் தத்துவங்கள், கல்யாண குண வைபவங்கள், மகிமை, பெருமை, நாம விசேஷம் இவற்றைப் பற்றிய உண்மையறிவு. இவ்விரண்டினையும் அளிப்பவர் சாஸ்தா.
இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவன். அது தவிற, எந்த ஒரு ஞானத்தையடைந்தால், மற்றெல்லா ஞானத்தையும் அடைந்ததாக ஆகுமோ, அல்லது எதையடைந்தபின் மற்ற ஞானம் தேவையற்றதாக ஆகிவிடுமோ, அந்த தன்னைப் பற்றிய ஞானமாகிய ஆத்ம ஞானத்தை அருள்பவரான சாஸ்தா நம்மோடு இருக்கும்போது மனிதர்களாகிய நமக்கு வேறு என்ன தேவைப்படும்?
திருச்சூர் அருகே திருவல்லக்காவு என்ற இடத்தில் சாஸ்தா ஞானமூர்த்தியாக வழிப்பட்டு வருகின்றார். இங்கு வித்யாரம்பம் செய்த (எழுத்துக்கள் தொடங்கும்) ஒரு குழந்தை அறிஞர் ஆவது நிச்சயம் என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கனோர் தன் குழந்தைகளின் வித்யாரம்பம் இங்கு செய்வது வழக்கம்