சந்தான ப்ராப்தி சாஸ்தா
ஹரிஹர புத்திரரான சாஸ்தாவை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. சிவபெருமான், சாஸ்தா அவதரித்தவுடன், “குழந்தாய்! நானும், விஷ்ணுவும், பிரம்மனும் உன் உருவாய் அவதரித்திருக்கிறோம்” என்று பாராட்டியதாக-
"த்வத் ரூபேணாவதீர்ணாஸ்ம, ப்ரஹ்மாவிஷ்ணுரஹம் ஸுத" என்று ஸ்காந்த புராணத்திலுள்ள கோடிருத்ர ஸம்ஹிதையிலிருந்து தெரிகிறது.
மேலே கூறிய கருத்துக்களின்படி, ஹரி-ஹர சக்திகளான லக்ஷ்மியும், துர்கையும் பூர்ணா-புஷ்களாவாக ஐயனை அலங்கரிக்கின்றன. பிரம்மனும் இணைந்து மும்மூர்த்திகளின் அம்சமாக சாஸ்தாவை தியானிக்கும் போது, பிரம்மனது சக்தியாம் ஸரஸ்வதியானவள் பிரபா என்ற பெயரில் ஸ்ரீ மஹா சாஸ்தாவை காந்தர்வ முறையில் மணந்து கொண்டு ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சாஸ்தா-பிரபாவதி காந்தர்வ விவாஹம் அடிப்படையிலேயே எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா இயற்றிய சாஸ்த்ரு அஷ்டபதியும் அமைந்துள்ளது. கல்லிடைக்குறிச்சி, கொச்சி, நூறணி போன்ற பல இடங்களில் நடைபெற்று வரும் சாஸ்தாப்ரீதியில் செல்லப்பிள்ளைக்கு தனி ஸ்தானம் உண்டு.
இரண்டு ஆண்மூர்த்திகளுக்கு அதிசயமான அவதாரமாக அவதரித்த ஹரிஹரபுத்திரனை பிரம்மச்சாரியாக (ஐயப்பனாக) உலகமே வழிபடும் போது, அந்த சாஸ்தாவைக் கல்யாண கோலத்தில் கண்டதுமின்றி குழந்தையுடனும் இருப்பதாக தியானிக்கும் போது இது ஒரு விசேஷமான அனுக்ரகமூர்த்தி என்று உணரலாம்.
ஸ்ரீ பூதநாத கராவலம்பத்தில் “ஸம்பூர்ண பக்த வர ஸந்ததி தான சீல” என்று வருகிறது. ஸ்ரீ மஹா சாஸ்தாவின் மூலமந்திரத்திலும் “புத்ரலாபாய” என்று வருகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் க்ருதியில் “ப்ரார்த்தித புத்ர ப்ரதம்” என்று பகவானைப் பாடுகிறார்.
இராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்த பொது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு "மகத்பூதம்" என்று வால்மீகி வர்ணிப்பது சந்தான ப்ராப்தி அருளும் சாஸ்தாவையே ஆகும். சோட்டானிக்கரை பகவதி, திருவள்ளக்காவு போன்ற கோவில்களில் இவரை அரூபமாக வழிபட்டு வருகின்றனர்.