ஸ்ரீ ஆதிபூத நாதர்

நம்முடைய இந்து மதத்தை போலவே சாஸ்தா வழிபாடும் சனாதனமானது. நமது நாகரீகத்தை வேதகால நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. எந்தவொரு சந்தேகம் ஏற்பட்டாலும் வேதமே பிரமாணம் ஆகிறது. வேதம் எப்பொழுது தோன்றியது என்று எவருக்கும் தெரியாது. ஆனால் வேத காலத்துக்கு முற்பட்டவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்ப்போம். கல்லை ஆயுதமாகவும் இலை தழைகளை ஆடைகளாகவும் அணிந்த மனிதர்கள் மிருகம் போல் ஆண்-பெண் பேதம் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தங்களது மீறிய செயல்களில் பயந்து வாழ்ந்து வந்தனர்.
பஞ்ச பூதங்களை கண்டு பயந்த கற்கால மனிதன், ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி ஆகியவற்றை தெய்வங்களாக வணங்க வேண்டும் என்று நம்பினான். நம் கண்களால் நம்ப முடியாத அளவுக்கு பெருத்த உருவம் கொண்ட ஒன்றை பூதம் என்று அழைத்தார்கள். இவை தன்னிச்சையாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செல்வதற்கு ஒரு தலைவன் தேவைப் பட்டான். அவனே பூதநாதன் எனப்படும் ஐயப்ப ஸ்வாமி ஆவார். சாஸ்தாவின் மற்றொரு பெயர் பூதநாதன் என்பதாகும். இதற்கு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவர் என்று பெயர்.
கடவுளாக கும்பிட வேண்டும் என்று நினைத்த கற்கால மனிதன், ஒரு குறிப்பிட்ட பாறைகளையோ மரத்தையோ வணங்க தொடங்கினான். இன்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் உருவமற்ற பாறைகளை வழிபடுவது மரபு.

இதற்கு பின்னர் நாகரீகம் வளர்ந்து மனிதர்கள் மனிதர்களாக வாழ முற்பட்டனர். அவர்கள் கற்று கொண்ட முதல் தொழில் மண் பாண்டம் செய்வது. அவர்கள் குயவர்கள் என்னும் இனத்தை சார்ந்தவர்கள். இறைவனை வழிபடுவதர்காக யானை குதிரை மனிதர்கள் போன்ற சிற்பங்களை உருவாக்கி இறைவனுக்கு படைத்தார்கள். தனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று நினைத்த கற்கால மனிதன் கட்டிட கலை பயின்று தொழில் ஆரம்பிக்கும் முன்பு சுதை சிற்பங்களாய் யானை குதிரை போன்ற சிற்பங்களை இறைவனுக்கு படைத்தார்கள். ஐயனார் கோவில்களில் யானை குதிரை போன்ற சுதை சிற்பங்கங்களை காண்பதுபோல் வேறு எந்த கடவுளுக்கும் இந்த வழிபாடு கிடையாது

நெசவு தொழில் செய்பவர்களும் சாஸ்தாவை வழிபட்டு இருக்கிறார்கள். நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த திருவள்ளுவரின் குலதெய்வம் சாஸ்தா என்று ஒரு கூற்று உண்டு. இப்படி கற்கால மனிதன் தான் செய்த பிரதான தொழில்களான விவசாயம் (உணவு), நெசவு (உடை), சுதை சிற்பங்கள் (இருப்பிடம்) ஆகியவைகளில் சாஸ்தாவை வழிபட்டு இருக்கிறார்கள் என்று தெளிவாகிறது


யுகங்களின் அடிப்படையில் சாஸ்தா வழிபாடு தொன்மையாகவே விளங்குகிறது. பிரளய காலத்திற்குப் பிறகு,முதல் மன்வந்தரம் முதல் ஆறாவது மன்வந்தரம் வரை சாஸ்தா வழிபாடே இருந்துள்ளது. ஆறாவது மன்வந்தரத்தில் தான் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரஸிம்ம அவதாரங்கள் ஏற்பட்டன. இதில் முதல் மூன்றுஅவதாரங்களில் சாஸ்தாவே கடலுக்கும் பூமிக்கும் ஆதாரமாக விளங்கினான்.

பாலாழிமதனம் கடையப் பெற்று சாஸ்தா அவதாரமானதும் இக்காலத்தில் தான். இந்த கால கட்டத்தில் பூவுலகம் ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றுக்கும் அதிபதி சாஸ்தாவே ஆகும். (உ.ம்: குசாதிப: சால்மலீபதி:) நரஸிம்ம அவதாரத்தில் காத்யாயன மகரிஷியின் பெண்ணான காத்யாயனி தேவிக்கு புத்திரனாக காத்யாயினி ஸுத: என்றும் ஸ்வாமி அழைக்கப்படுகிறார்.

வாமனாவதாரத்தில் வாமன பூஜித: என்று அழைக்கப்படுகிறார். இவை நடந்தது க்ருத யுகத்தில் ஆகும்.

க்ருத யுகத்தில் தொடங்கி பல யுகங்களில் அவதரித்து, கலியுக ப்ரத்யக்ஷம் என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது போல், கலியுகத்தில் பக்தர்கள் இறைவனை சரணமடைவதுமே ஸ்வாமி கலியுக தெய்வம் என்பதைபறைசாற்றுகின்றன. ஆக நான்கு யுகங்களையும், பல மன்வந்தரங்களையும் கடந்து சாஸ்தா யுக புருஷனாக இருக்கிறான் என்பது வெள்ளிவிடைமலை.

“ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ”

என்ற ஸ்லோகத்தில் சாஸ்தாவை பூத நாதனாக வர்ணித்து இந்த உலகையே காக்க வேண்டுகின்றோம்அல்லவா?

தமிழ் நாடு மற்றும் கேரளாவில் பல கோவில்கள் இவருக்கு உண்டு. குறிப்பாக காடந்தேத்தி ஆதீனமழயர்,காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் போன்ற கோவில்களில் இவரை காணலாம். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் சாஸ்தாவின் செண்டாயுதத்தை கொண்டு தான் கரிகால சோழன் இமய மலை வரை வென்றதாக ஒரு குறிப்பு உள்ளது.

சிலப்பதிகாரத்தில் இவரை பற்றி குறிப்புகள் உள்ளது. காஞ்சி மஹா பெரியவர் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மாவிற்க்கு கொடுத்த அருளாணையின்படி ஆதி பூதநாதரே வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் மூலவராக வர இருக்கிறார்.