வேத சாஸ்தா
சிங்கம் தர்ம ஸ்வரூபமானது. பகவானுக்கு சிம்ம வாஹனம் உண்டென்பதை “சிம்மா ரூடாயை நம”, “ஓம் ஹர்யஷ வாஹன ரூடாயை நம” (ஹர்யஷம்-> சிங்கம், சாஸ்தா திரிசதி - 26) போன்ற நாமங்கள் மூலம் அறியலாம்.
சாஸ்தாவை "விப்ர பூஜ்யம்" என்று போற்றுகிறோம் - வேதம் கற்றறிந்தவர்ளால் பூஜிக்கப்படுபவன் என்று பொருள். அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த ரிஷிகளுக்கெல்லாம் இஷ்ட தெய்வமாக விளங்கியவர் சாஸ்தா. அந்த காரணத்தாலேயே சாஸ்தா ஆலயங்கள் பெரும்பாலும் காடுகளிலும் மலைகளிலும் மட்டுமே காணப்படுகிறது போல் உள்ளது.
“ப்ரம்ஹா ரசிகாயை நம” என்று சாஸ்தாவுக்கு ஒரு நாமம் உண்டு. இதன் பொருள் : வேதம் ஓதுவதை ரசிப்பவன். “சர்வ வேத சாராயை நம” என்ற நாமம் மூலம் சர்வ வேத சாரமாக விளங்கும் சாஸ்தாவின் நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலே போதும், அனைத்து வேதங்களையும் ஓதினதாகும் என்ற உண்மையை விளக்குகிறது.
சாஸ்தாவே பரபிரம்மம்- தாரகபிரம்மம். சாஸ்தாவிற்கு “பஞ்சானனாய” என்ற பெயர் உள்ளது. சாஸ்தாவின் மூல மந்திரம் அடங்கிய ஸ்ரீ தர்ம சாஸ்தா மூல மந்திர விடுதியில் (9வது) பகவானுக்கு ஐந்து முகங்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சிவஸ்வரூபியாக சத்யோஜாதம் , வாமதேவம், தத்புருஷம், அகோரம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள் உடையவன் என்று கொள்ளலாம்.
பஞ்சானனம் என்ற சொல்லுக்கு பிளந்த வாய் கொண்ட சிங்கம் என்றும் பொருள் உள்ளது. விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம ஸ்வரூபியாகவும் சாஸ்தாவை கருதலாம். பிரம்ம ஸ்வரூபியாக இருந்து பிரபாவதியை காந்தர்வ விவாஹம் செய்தது நாம் அறிந்த சாஸ்தா மகாத்மியம். ஆக சாஸ்தாவே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் நமக்கு அருள் புரிகின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உண்மையை வலுப்படுத்தும் வகையில் மைத்ராயணி உபனிஷத் "ப்ரம்மா, விஷ்ணு, சிவன், சாஸ்தா, ப்ரணவம், ப்ரம்மம் எல்லாம் ஒன்றே" என்கிறது.
தாரக பிரம்மமான சாஸ்தாவின் முகத்தில் இருந்து தான் வேதங்கள் தோன்றின. “வேத முகாயை நம”- வேதங்கள் தோன்றிய முகமுடையவன் என்றுரைக்கிறது. வேதங்கள் அவனுடைய மூச்சுக்காற்று. இந்த உண்மையை “யஸ்ய நி:வஸிதம் வேதா:” ஆதி சங்கரர் எடுத்துரைக்கின்றார் (ஜீவன் முக்தி விவேகம் முதல் சுலோகம்).
“ஓம் மந்திர வேதினே நம, ஓம் மஹா வேதினே நம, ஓம் ரிக் யஜுஸ் சாம அதர்வ ரூபிணே நம,” etc, போன்ற சாஸ்தா சஹஸ்ரநாமத்தை பார்க்கும்போது இந்த வேத யக்ஞங்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து நற்பலனை வழங்குபவர் என்பது தெளிவாக தெரிகிறது.
நெல்லூர் மாவட்டம் தும்மகுண்டா என்ற ஊரில் சிம்ம வாகனனாக சாஸ்தாவை காணலாம். சேலம் அருகே வெடிகரம்பாளையம் என்ற கிராமத்தில் சாஸ்தா வேத மூர்த்தியாக விளங்குகிறார். ஞானத்தை அருள்வார். வேதம் தழைக்க அருள்புரிவார் புத்திமான். வேத அறிவுரைப்படி நம்மை நடத்தி செல்பவர்.